கரோனோ பாதிப்பை தவிர்க்க புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மதுபான கடைகளையும் மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு புதுச்சேரி மடுகரையில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற ஒரு சாராயக்கடையை கலால்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில் அதே சாராயக்கடையில் இன்று கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அரசின் உத்தரவை மீறி, அத்துமீறி உடைத்து உள்ளே நுழைந்து அங்கேயே கள்ளத்தனமாக சாராயம் விற்றனர்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற நெட்டப்பாக்கம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படை போலீசார் அங்கிருந்த நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 920 சீல்டு குவாட்டார் பாட்டில்களும், 1,42,000 ரூபாயையும் பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய சாராயக்கடை உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பொதுமக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் சீல் வைத்த கடையை உடைத்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்ற அந்த கடையின் உரிமத்தை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.