புதுச்சேரியில் மதுபான கம்பெனியில் தயாரிக்கப்பட்ட மது பாட்டில்களை கேரளாவுக்கு ஏற்றிச் சென்ற சரக்கு லாரியில் இருந்து திரைப்படப் பாணியில் பாட்டில்கள் கடத்தல் செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த 51 வயது பழனிசாமி என்பவர் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அந்த சரக்கு லாரிக்கு பாதுகாப்புக்காக விழுப்புரம் ஆயுதப்படை காவலர் விஜயகுமார் என்பவர் உடன் சென்றுள்ளார். அந்த லாரி உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி மாடூர்பாளையம் சுங்கச்சாவடிக்கு இடையில் ஒரு கும்பல் அந்த லாரியிலிருந்து மது பாட்டில்களை கடத்துவதற்கு திட்டமிட்டது.
அதன்படி ஒரு ஆம்னி வேனில் லாரியை பின் தொடர்ந்து சென்ற அந்த கும்பல் லாரியின் வேகம் குறையும்போது அதில் ஏற திட்டமிட்டது. அதன்படி இருவர் ஆம்னி வேனில் இருந்து லாரியில் ஏறினர். சரக்கு லாரியின் பின்புறத்தில் ஏறிய கொள்ளையர்கள் உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி இடையே உள்ள சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்குள் லாரியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கொள்ளையடித்தனர்.
எப்படி தெரியுமா?
லாரியை பின் தொடர்ந்து சென்ற ஆம்னி வேனில் வந்தவர்கள், ஆம்னி வேனின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு கிரிக்கெட்டில் பந்தை கேட்ச் பிடிப்பது போல், பாட்டில்களை வீசி அதை கேட்ச் பிடித்து வேனுக்குள் சேமித்தனர். கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி வரை சுமார் 200 மதுபாட்டில்களை கொள்ளையடித்த கொள்ளையர்கள், சுங்கச்சாவடியை லாரி நெருங்கும்போது வேகம் குறைந்ததை பயன்படுத்தி லாரி மேலிருந்து சாலையில் குதித்து தப்பித்துள்ளனர்.
இதை லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு லாரி டிரைவர் தற்செயலாக பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட சரக்கு லாரி டிரைவர் பழனிசாமியிடம் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த டிரைவர் பழனிசாமி, பாதுகாப்பு காவலர் விஜயகுமார் இருவரும் லாரியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு பின்னால் சென்று பார்த்தனர். அப்போது லாரியில் மிகவும் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து வழித்துணை காவலர் விஜயகுமார் லாரி டிரைவர் பழனிசாமி இருவரும் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு ஆம்னி வேன் லாரியை பின் தொடர்ந்து வந்ததை கண்டுபிடித்தனர். அதன் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அந்த ஆம்னி வேன் மதுரை மாவட்டம் கொசக்காப்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. மேலும் அவரே வேனை ஒட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் புதுக்கோட்டை நாகமலையைச் சேர்ந்த கனகராஜ், தேனி மாவட்டம் நாயக்கம்பட்டு ஜெகன்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கே.பி. சக்கரம் விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து மது பாட்டில்களை கொள்ளை அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் நால்வரையும் போலீசார் மடக்கி பிடித்து தியாகதுருகம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் நால்வரும் மது பாட்டில்களை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 194 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த காலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறமும் புளிய மரங்கள் வரிசையாக இருந்தன. அந்த மரங்களின் மீது ஏரி அமர்ந்து கொள்ளும் கொள்ளையர்கள் சரக்கு லாரிகள் மெதுவாக செல்லும்போது மரத்திலிருந்து லாரி மீது குதிக்கத் தயாராக இருப்பார்கள். குதித்த பின் தாங்கள் தயாராக வைத்திருக்கும் கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு சரக்கு லாரி மீது மூடி கட்டப்பட்டிருக்கும் தார்ப் பாய்களைக் கிழித்து அதில் உள்ள சரக்குகளை எடுத்து சாலையோரம் வீசிச் செல்வார்கள். லாரியின் வேகம் குறையும் போதோ அல்லது தாழ்வாக உள்ள மரக்கிளைகளில் மீண்டும் தொற்றி மரத்திலிருந்து கீழே இறங்கி லாரியில் இருந்து பொருட்கள் வீசப்பட்ட இடங்களை அடையாளம் கண்டறிந்து அவற்றை கைப்பற்றி செல்வார்கள். இரு வழிச் சாலைகளாக இருந்து நான்கு வழிச் சாலையாக 6 வழிச் சாலையாக சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனால் சாலையோர மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக சரக்கு லாரிகளில் கொள்ளையடிப்பது குறைந்து போனது. தற்போது வாகனங்களை பின் தொடர்ந்து சென்று சரக்கு லாரிகளில் மீது ஏறி கொள்ளை அடிப்பதில் புதிய புதிய பாணிகளை பின்பற்றி வருகிறார்கள் கொள்ளையர்கள்.