கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது கனக நந்தல் கிராமம். இந்த கிராமத்துக்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (22.8.2022) இரவு 10 மணி அளவில் விற்பனையை முடித்து கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று (23.8.2022) காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பிறகு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருக்கோவிலூர் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், நேற்று (22.8.2022) முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் பதிவு எண் இல்லாத ஒரு காரில் வந்த ஐந்து நபர்கள் டாஸ்மார்க் கடையின் பின்புறம் காரை நிறுத்திவிட்டு மதுபான கடையில் பூட்டை உடைக்கின்ற காட்சி பதிவாகியுள்ளது. மேலும் அந்த கேமராவில் மூன்று நபர்களில் இரண்டு பேர் நடந்து செல்லும் காட்சியும் பதிவு ஆகியுள்ளது. அதில், இருவர் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று மதுபாட்டில் பெட்டிகளை எடுத்து வந்து காரில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையை நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.கொள்ளையடிக்கப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 50,000 என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் வந்து டாஸ்மாக் மதுக்கடையில் பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள டாஸ்மாக் கடைகளின் சுவற்றில் ஓட்டை போட்டும், கடையின் பூட்டை உடைத்தும் மது பாட்டில்களை கொள்ளையடிப்பது, விற்பனையாளர்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை வங்கியில் கட்டுவதற்காக எடுத்துக்கொண்டு செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களை தாக்கி விட்டு பணத்தை கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் உள்ளன. டாஸ்மாக் கடையில் பணி செய்யும் ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகிறார்கள்.