நெல்லை மாவட்டத்தின் தென் மேற்குத் தொடர்ச்சி மலை பரந்து விரிந்து செல்கிற அம்பை பாபநாசம் பகுதி மலையில் வழி வழியாய் வாழ்ந்து வருகிற மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.
தேசம் விடுதலை பெற்ற பிறகும் முக்கால் நூற்றாண்டாக மண்ணெண்ணைச் சிமினியின் அரையிருட்டில் வசித்து வந்த அந்த 48 குடும்பங்களின் வீடுகளுக்கு மின்சாரம் நேற்று முன்தினம் எட்டிப்பார்த்துக் கொட்டிய வெளிச்சத்தால் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் அந்தக் காணிக் குடியிருப்பு வாசிகள். மலைமீது காரையாறு அகஸ்தியர் காணிக்குடியிருப்பு சின்னமயிலாறு, சேர்வலாறு போன்ற பகுதிகளில் கொடிய விலங்குகள் ராஜநாகங்கள் உறைகிற இடங்களில் பழங்குடியின மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்கள். இதில் சேர்வலாறு, காரையாறு, மற்றும் அகஸ்தியர் காணிகுடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஏற்கனவே மின்சார வசதிகள் உள்ளன.
ஆனால் காரையாறு ஓரத்தில் சின்னமயிலாறு காணிகளின் குடியிருப்புகளான 48 வீடுகளுக்கு மட்டும் மின்சார வசதி தரப்படவில்லை. தேசம் சுதந்திரமடைந்து தற்போதைய வருடம் வரை, அதாவது 72 வருடங்களாக அந்த மலைப் பழங்குடியின மக்கள் கொடிய விலங்குகளுக்கு அஞ்சியவாறு அவைகளின் மத்தியில் குடும்ப உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் பொழுதை நகர்த்தி வந்துள்ளனர்.
தங்களின் உயிர் நெருக்கடி வாழ்வினைச் சுட்டிக் காட்டிய மின்சார வசதியைப் பெற அரசு மற்றும் மின்சாரத் துறைக்கு கோரிக்கைப் போர் அசராமல் நடத்தி வந்திருக்கின்றனர். அந்தப் பகுதிகளில், வனவிலங்குகள் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வனத்துறையினர் தடுத்தும் சிக்கல்களையும் தெரிவித்தனர். மத்திய சுற்றுச் சூழல் துறையும் இதையே காரணம் காட்டி மின் இணைப்பை மறுத்தது.
ஆனால் கோரிக்கையில் தளர்ந்து விடாத காணியினமக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நல்ல காலம். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மின்சாரம் வழங்க ஒப்புதலானது, நெல்லை மாவட்ட கள இயக்குனர் மற்றும் தலைமை வனக் காவலர் கைரத் மோகன்தாஸ் துணை இயக்குனர் கொம்மு ஓம்கார் போன்றவர்களின் முயற்சியால் பழங்குடியின மக்களின் 48 வீடுகளுக்கும், வனத்துறையின் நிதி உதவியுடன் நேற்று முன்தினம் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்கென்று 100 கே.வி.ஏ. மின்மாற்றி மற்றும் 38 மின் கம்பங்கள் வசதிகளுடன் அந்த வீடுகளுக்குள் வெளிச்சம் பாய்ந்தது.
72 வருடங்களுக்குப் பின்பு தங்களது வாழ்க்கையில் எட்டிய வெளிச்சம் தங்கள் மக்களுக்கான விடியல் என்ற மலைப்பிலிருக்கின்றனர் மலைப் பழங்குடியினர். நிகழ்வுகளில் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் விஜயராஜ் வனச்சரகர் சரவணக் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அதிசயங்கள் நினைத்த நேரத்தில் நடந்து விடுவதில்லை. அரிதிலும் அரிதாகத்தான் நிகழும்.