காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயதாரணி கடந்த 24 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியதோடு, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டப் பேரவை முதன்மைச் செயலருக்கு, 'விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவில் சேர்ந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை கைப்பட எழுதி சட்டப்பேரவை தலைவருக்கும் சட்டப்பேரவையினுடைய முதன்மை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார் விஜயதாரணி. இதனையடுத்து விஜயதாரணியின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.