ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முழு உரிமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் வேளாண்மைக்கான தனியாக நிதிநிலை அறிக்கையை இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் தமிழகத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அது மிகப்பெரிய சாதனை அதேபோல் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி 5 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் இன்றைக்கு உணவுப் பொருள் நெல் தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு சிவில் சப்ளை குழுமங்களுக்கு வந்திருக்கிறது.
இது மிகப் பெரிய சாதனை இன்னும் வந்து கொண்டிருக்கிறது. பார்த்தால் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்றுச் சாதனையாக கொள்முதல் அளவு நிச்சயமாக நெல் உற்பத்தியில் தமிழக அரசு எட்டிவிடும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முழு உரிமை தமிழ்நாடு அரசுக்கு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இருக்கிறது. அங்கு நாங்கள் மீண்டும் சட்ட முன் வடிவில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்போம். சட்ட பாதுகாப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை எப்படி தெளிவுபடுத்த வேண்டுமோ அப்படி செய்து கொள்வோம்” என்றார்.