கோவையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட ஊர்வலத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயன்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை என அக்கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்திருந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது ஊர்வலமாகச் சென்றபொழுது பாஜகவினர் கடைகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்,
''நேற்று வரும் வழியில் இரண்டு பக்கமும் கோஷம் போட்டார்கள். அதனால், ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அவ்வளவுதான் அதற்கப்புறம் கலைந்து விட்டார்கள். அந்த கடைக்காரர், சம்பந்தப்பட்ட நபர் கூட புகார் கொடுக்கவில்லை. ஆனால், ஒரு அமைப்பு புகார் கொடுத்திருக்கிறது. எந்தப் பதட்டத்தையும் பாஜக ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை. நேற்று ஆயிரக்கணக்கான எங்கள் கட்சித் தொண்டர்கள் அமைதியான வழியில் ஊர்வலம் நடத்தினார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில்தான் கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் சொல்லட்டும். கோயம்புத்தூர் மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஸ்டாலின்'' என்றார்.