சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் இன்னும் 6 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் கனமழையால் வீட்டின் முன்புறம் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த லட்சுமணன் என்ற 11 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்டான். அதனைத்தொடர்ந்து தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதேபோல் சென்னை ஓட்டேரியில் ஒரு மூதாட்டியும், புளியந்தோப்பு பகுதியில் அம்மையம்மாள் தெருவில் ஒரு பெண்ணும் என இதுவரை மூன்று பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான 'ரெட் அலர்ட் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ”பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லவேண்டாம். எம்.சி.ஆர், வடபழனி, மாம்பலம் பகுதிகளில் அதிக மழைபொழிந்துள்ளது. கனமழை குறைந்தவுடன் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீர் விரைந்து அகற்றப்படும்” என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.