Skip to main content

மீண்டும் ஊருக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தை; அச்சத்தில் தாளவாடி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

The leopard that entered the town again and bit the calf; Trembling in fear

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுத்தை கால் தடம் பதிவானதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறுத்தை தான் 11 ஆடுகளை கடித்துக் கொன்றது உறுதியானது.

 

இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு 11 மணி அளவில் ராஜன் தோட்டத்திற்கு மீண்டும் சிறுத்தை வந்துள்ளது. அங்கு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துள்ளது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு ராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. மீண்டும் சிறுத்தை வந்ததை கண்டு ராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தை கடித்ததில் கன்றுக்குட்டிக்கு காது கழுத்தில் காயம் ஏற்பட்டது.

 

அங்கிருக்கும் வீடுகள் தனித்தனியாக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், சிறுத்தை வனப்பகுதியை விட்டு  வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விடுகிறது. இரண்டாவது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தேர்மாளம் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டு முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்