பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. டெண்டர் தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிபந்தனைகள் படி, டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் என விற்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நீதிபதி வேலுமணி தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசுத்தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வரக்கறிஞர் விஷ்ணு மோகன், தற்போதைய கரோனா சூழ்நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனவும் டெண்டருக்கு தடை விதிக்க கோரிய மனுவை திரும்ப பெற அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இதனை எற்று அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், மனுதரார் மனுவை திருப்ப பெறுவது நன்று என தெரிவித்தனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் டெண்டர்க்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை மனுதரார் திரும்ப பெற்றதை அடுத்து மேல் முறையீட்டு மனுவை முடிக்க வேண்டும் என கோரினார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டர்க்கு தடை விதிக்க கோரிய மனுவை திரும்ப பெற கோரிய மனுவை ஏற்றுக் கொள்ளதாகவும், டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்குவதாகவும் மனுவை திரும்ப பெற அனுமதித்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான இருந்த தடை நீங்கியது.