மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை முடிந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கடந்த 2016ம் ஆண்டின்போது தனது வீட்டில் உள்ள மாடியில் தடுக்கி விழுந்ததால் வலது காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு அப்போது நடந்த அறுவை சிகிச்சையில்தான் காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை நவம்பர் 22- ஆம் தேதி நடைபெற்றது.
அதன்பிறகு மருத்துவமனையில் ஓய்வில் இருந்த கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை நலமாக முடிந்து மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப இன்று மாலை இல்லம் திரும்பினார். மருத்துவமனை நிர்வாகத்திற்கும், சிறப்புடன் மருத்துவம் அளித்த மருத்துவர்களுக்கும், உதவியாளர்களுக்கும், ஏனைய பணியாளர்களுக்கும், அத்துடன் கமல்ஹாசன் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.