சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி. ஸ்டார் ஓட்டலில் திருநர் உரிமை கூட்டமைப்பு நடத்தும் இளம் திருநர் ஆளுமை மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இளம் திருநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் அரசியல் ஆளுமைகள் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் திருங்கைகளின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை உள்ள மாற்றங்களையும் அவர்கள் கடந்த வந்த பாதைகளின் வலிகளையும், வேதனைகளையும் எடுத்துரைத்தர். அதில் திமுக ஆட்சிக் காலமே எங்களுக்கு விடிவு காலமாக இருந்தது. மிக முக்கியமான காரணம் இவர்களை பல பெயர்களை வைத்து அழைத்த சமூகத்தில், அரசு நலவாரியம் அமைத்து திருநங்கைகள் என பெயர் சூட்டியது அந்த பெருமை திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர் தான் என்றும். தற்போது அதே திமுக ஆட்சிதான் இந்த சமூகத்திற்கான இடஒதுக்கீடு தரும் என நம்புகிறோம் எனவும் மாநாட்டில் முக்கிய தீர்மானமாக வைத்துள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கிரேஸ்பானு எழுதிய நூலினை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அவர் பேசுகையில் இந்த மாநாடு தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறுவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கிரேஸ்பானுவை நான் ஒரு போராளியாக அறிவேன். ஆனால் ஒரு எழுத்தாளர் என்பது கண்டு பெருமைப்படுகிறேன். அதே போல நல்ல ஒருங்கிணைப்பாளாராகவும் இருக்கிறார். அதைவிட நல்ல இடதுசாரி சிந்தனையாளாரகவும் இருக்கிறார். உடனே இடதுசாரி சிந்தனையாளர் என்றதும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என்று பொருள் அல்ல, இட ஒதுக்கீட்டுக்காக போராடுபவர்கள் அனைவரும் இடதுசாரிகள் தான்.
சமூகநீதிக்காக போராடுபவர்களும் அனைவருமே இடதுசாரிகள் தான். சமத்துவம் பற்றி சிந்தனை உடையவர்கள் அனைவருமே இடதுசாரிகள் தான். இந்த மேடையில் டாக்டர்.அம்பேத்கர் படத்துடன் அவருடைய துணைவியாரின் படமும் இருந்தது. அதுதான் பாலின பாகுபாடு இல்லாத சமத்துவப் பார்வை, அதைத்தான் டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார். பாலின சமத்துவம் இல்லாமல் பொருளாதார சிக்கலையும் வர்க்க முரண்களையும் பேசிக்கொண்டு இருந்தால் அது சான்ட் குவியிலின் மீது கட்டப்படும் அரண்மனைக்கு ஒப்பாகும் என்கிறார்.
அதன்படி குடும்ப புறக்கணிப்பு, சமூகப் புறக்கணிப்பு,ஆளும் வர்க்கப் புறக்கணிப்பு என இதோடு நிறுத்திக் கொள்ளாமல் இழிவுப்படுத்துதல், கொடுமைப்படுத்துதல் , இதில் இருந்து விடுபட வேண்டுமாயின் நீங்கள் அமைப்பாக திரள வேண்டியுள்ளது. அதன்மூலமாக உங்களுக்கான உரிமைகளை போராடி பெற வேண்டும். அதன் மூலமாக கல்வி வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பெற வேண்டும். இது இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கவேண்டும் என்றார்.