கோயில்களை காக்கவேண்டிய இந்து அறநிலைத்துறை அதிகாரிகளே சிலைக்கடத்தலிலும் மோசடிகளிலும் சிக்கிக்கொண்டிருப்பது குறித்து நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.
நக்கீரன் வெளியிட்ட ஊழல் அதிகாரிகளின் பட்டியலில் கூடுதல் கமிஷனர்(திருப்பணி)கவிதா அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிப்பதற்கு பதிலாக…சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
“ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் அதிரடி விசாரணையை வைத்தே இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோயில்களை அந்தந்த நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான வேலையில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.வினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நக்கீரன் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டால் மத்திய பா.ஜ.க. அரசின் கீழுள்ள சி.பி.ஐ.-ஐ வைத்தே தனது அஜெண்டாவை முடித்துவிடுவார்கள்” என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில், உயரதிகாரி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இனி யாரையும் கைதுசெய்துவிடக்கூடாது என்பதாலும் அவசர ஆலோசனைக்கூட்டம் இந்து அறநிலைத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்து அறநிலைத்துறையின் திருச்சி இணை ஆணையர் ஜெயராமன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டரில் ஆரம்பித்து ஏ.சி., டி.சி., என அனைவரும் 59 நாட்கள், 58 நாட்கள் லீவு போடுவோம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. 60 நாட்கள் லீவு போட்டால் மெடிக்கல் போர்டில் அதற்கான காரணத்தைச்சொல்லவேண்டும் என்பதால் இப்படி, விடுமுறை போட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை செய்ய ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.