பேராவூரணியில்
வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்
முன் விரோதம் காரணமாக திருமண வீட்டை அடித்து நொறுக்கி, திருமணத்திற்காக வைத்திருந்த டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் வெங்கடேஸ்வரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பேராவூரணி அருகேயுள்ள மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் வினோத்துக்கும்- சங்கீதாவுக்கும் (செப்.15 வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவரும், உறவினருமான வழக்கறிஞர் வெங்கடேஸ்வரர் என்பவர், பேராவூரணியில் இன்று வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனரை கிழித்து எரிந்ததோடு, மணமகனின் வீடு புகுந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி தரப்பினர் பேராவூரணி கடைவீதியில் வியாழக்கிழமை மாலை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனிடையே பேராவூரணி வர்த்தக சங்க தரப்பில் இருந்தும் வழக்கறிஞர் வெங்கடேஸ்வரர் மீது புகார் அளிக்கப்பட்டும், பேராவூரணி காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வர்த்தக சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா மற்றும் வர்த்தகர்களும் இணைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன், பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன், தனிப்படை ஏட்டு பெத்தபெருமாள் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் வழக்கறிஞர் வெங்கடேஸ்வரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
-இரா.பகத்சிங்