ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடைக்காலத் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆறு மாதகால இடைவேளையில் அதே சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை 4 மாதங்கள் 11 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கூடுதலாக விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் சில திருத்தங்களைச் செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல் முந்தைய அரசு இயற்றிய சட்டத்திற்கு அன்றைய ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அது நீதிமன்றத்திற்கு சென்றபோது சட்டமன்றத்திற்கு இது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்த சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை இயற்றுங்கள் என்று கூறியது. அப்படி இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் எந்த அடிப்படையில் நீக்கியிருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியது இதுதான் முதல்முறை. இரண்டாவது முறையல்ல. முதலில் இந்த சட்டம் குறித்து சில கேள்விகள்தான் கேட்டிருந்தார். அதற்குத்தான் பதில் சொல்லியிருந்தோம். இந்த நிலையில்தான் தற்போது ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார். அதனைச் சரிசெய்துவிட்டு மீண்டும் அவருக்கு அனுப்பி வைப்போம். இரண்டாவது முறை அவர் கண்டிப்பாக ஒப்புதல் தந்தாக வேண்டும். மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது” என்றார்.