பருவ மழை தொடங்கிய நிலையிலேயே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டு அழிக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சியில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் பொது இடங்களில் டெங்கு கொசு உற்பத்திக் கூடங்களை அழிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் அந்தந்த கட்டிட, கடை உரிமையாளர்களே இது போன்ற இடங்களை கண்டறிந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து வழியுறுத்தி வந்தாலும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் டெங்கு காரணங்களை கண்டறிய சென்றபொழுது அதிர்ச்சியடைந்தனர். பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் பல ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் தனியார் விடுதியின் மாடியிலும் பக்கவாட்டிலும் குவிந்து கிடந்தது. லாரியில் ஏற்றும் அளவுக்கு மதுபாட்டில்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் டெங்கு கொசு உற்பத்தி கூடாரமாக வைத்திருந்த தங்கும் விடுதிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

ஆனால் விடுதி உரிமையாளர் மணி தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் நம்மிடம்.. நாம் இருக்கும் இடங்களையும் நகரையும் தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் வராது. அந்த விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும் என்பதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்தினாலும் தினசரி ஆய்வுகள் சோதனைகள் நடக்கிறது. அப்படி நடந்த சோதனையில்தான் இவ்வளவு பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஆய்வுகள் தொடரும் டெங்கு இல்லாத புதுக்கோட்டையை உருவாக்குவோம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.