சிலை கடத்தல் தடுப்புபிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 12 அதிகாரிகள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ஒரு டிஎஸ்பி, நான்கு ஆய்வாளர்கள், ஒரு ஏடிஎஸ்பி, ஆறு சார்பு ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 12 பேர் தங்களுக்கு சிலைகடத்தல் பிரிவில் இருந்து இடமாற்றம் வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுபற்றி டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் ஒரு டிஎஸ்பி, நான்கு ஆய்வாளர்கள்,ஒரு ஏடிஎஸ்பி, ஆறு சார்பு ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 12 பேர் பொன்.மாணிக்கவேல் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இன்றி வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை நடத்தவேண்டும் என பொன்மாணிக்கவேல் வற்புறுத்துவதாகவும், அதற்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை திட்டுவதாகவும், மிரட்டுவதாகவும் இதனால் தங்களுக்கு பணிமாறுதல் வேண்டும் என மனு கொடுத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.