Skip to main content

கன்னட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுடைய படுகொலைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
கன்னட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுடைய படுகொலைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
 
மூத்த கன்னட பத்திரிகையாளரும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியருமான கௌரி லங்கேஷுடைய கொடூர கொலையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வன்மையாக கண்டித்துள்ளார்.
 
நேர்மையான மற்றும் தைரியமான பெண் பத்திரிகையாளரும், சமூக செயல்பாட்டாளருமான லங்கேஷ் நேற்று பெங்களூருவில் வைத்து மதவாத பாசிச சக்திகளால் சுட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
ஃபாசிஸ வகுப்புவாதத்திற்கு எதிரான இடைவிடாத போராட்டத்திற்காகவும், இந்த தேசத்தின் மதச்சார்பற்ற விழுமியங்கள் மீதான சமரசமற்ற விசுவாசத்திற்காகவும், அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.
 
இதழியல் ஒரு தொழில் என்பதையும் தாண்டி அவருக்கு அது வழிமுறையாக இருந்தது. வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அது அவருக்கு ஆயுதமாக இருந்தது. அநீதிக்கு எதிராக அவர் கொண்டிருந்த சமரசமற்ற நிலைப்பாடுதான் அந்த குற்றவாளிகளுக்கு வயதான பெண்ணின் பயங்கரமான கொலையை செய்ய தூண்டியிருக்கும். கொலைகாரர்களும் திரைக்கு பின்னால் அவர்களுக்கு தலைமை தாங்கியவர்களும் அவர்களது எதிரிகளை மிரட்டுவதன் மூலம் மௌனப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுப்போவார்கள். அவர்கள் விரும்புவது போல் இல்லாமல் ஃபாசிசத்திற்கு எதிராக செயல்பட லங்கேஷுடைய வீரமரணம் மென்மேலும் மக்களை ஊக்குவிக்கும்.

கெளரியுடைய படுகொலை மதச்சார்பற்றவர்களுக்கான இழப்பு என்பதையும் தாண்டி ஓடுக்கப்பட்ட மக்களுடைய பேரிழப்பாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் நீண்ட காலமாக அவர்கொண்டிருந்த நட்பையும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  தேசிய பேரியக்கமாக அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 2007 பெங்களூர் எம்பவர் இந்தியா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார் என்பதையும் நினைவு கூறுகின்றோம். இத்தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் இருந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 
 
இந்த படுகொலை கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் முதல்நிகழ்வல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்வியாளரும் சிந்தனையாளருமான எம் கல்புர்க்கி தர்பார் மாவட்டத்தில் வைத்து இதே போன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீடுகள் காரணமாக இந்துத்துவ படுகொலையாளர்கள் பாதுகாப்பு பெற்று வருகின்றனர் என்று கூறியுள்ள இ. அபுபக்கர் தற்போது கர்நாடகாவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு மாநிலத்தை இந்த படுகொலையாளர்களிடம் இருந்து பாதுகாப்பதுடன் கெளரி லங்கேஷுடைய இந்த கொலைக்கு பின்னால் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்