Skip to main content

ரூ.20 ஆயிரம் லஞ்சம்; நில அளவை சார் ஆய்வாளர் கைது

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Land surveyor arrested for Rs.20 thousand bribe

 

சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். திருமுல்லைவாயிலில் உள்ள இவரது வீட்டின் இடம் நில உச்சவரம்பின் கீழ் அரசு கையகப்படுத்தியுள்ளது. இதனால், அதனை நீக்குவதற்காக கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி பூந்தமல்லி சன்னதி தெருவில் அமைந்துள்ள நகர்ப்புற அலுவலகத்திற்கு சென்று  நில அளவை சார் ஆய்வாளர் ஐசக் என்பவரிடம் மனு கொடுத்துள்ளார்.

 

இதையடுத்து, சேகர் கடந்த 2ஆம் தேதி தனது மனுவின் நிலை குறித்து ஐசக்கை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், சேகரின் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு, சேகர் இந்த தொகையை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஐசக், சேகரிடம் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

 

ஆனால், சேகருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை சேகரிடம் வழங்கியுள்ளனர். பின்னர், அந்த பணத்தை ஐசக்கிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய அறிவுரையின்படி, சேகர் அலுவலகத்திற்கு சென்று ஐசக்கிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஐசக்கை கையும் களவுமாக பிடித்தனர். அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்து ஐசக் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்