இருவேறு சமூகத்தில் சிலருக்கிடையே ஏற்பட்ட மோதலால் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பல்வேறு கட்சியின் முக்கியஸ்தர்களை அழைத்து பேசிவருகின்றனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் எம்எல்ஏ அலுவலகத்தில் முகாமிட்டு அதிகாரிகள் மூலம் அமைதி திரும்ப என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.
சம்பவம் அறிந்து அதிரந்துபோன மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் நாகை எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி அக் கட்சி நிர்வாகிகளோடு வேதாரண்யம் விரைந்து வந்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்ததோடு பதட்டத்தை குறைக்க என்ன வழி என பேசிவருகிறார்.
நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மத்திய மண்டல ஐஜி வரதராஜிலு உள்ளிட்டவர்களும் அமைச்சர் ஒ.எஸ்.மணியனோடு வேதாரண்யம் வந்து முகாமிட்டு தடை உத்தரவு பிரப்பித்து ஒவ்வொரு சாலைகளின் முகப்பிலும் காவல்துறையை குவித்துள்ளனர்.
அதுபோல் வேதாரண்யத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், பல்வேறு சமூக பிரமுகர்களை தொடர்புக்கொண்டு அனைவரது ஒத்துழைப்பு இருந்தால்தான் அமைதிநிலைக்கு கொண்டுவரமுடியும் என கூறி அழைப்பு விடுத்துள்ளனர். அதேபோல வேதாரண்யம் வட்டாரத்தில் டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், " இரு சமுக இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலானது அம்பேத்கார் சிலை உடைப்பில் முடிந்ததுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. காவல் அதிவிரைவுப் படை குவிக்கப்பட்டு இருப்பதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்." என கூறியுள்ளார்.
இது குறித்து வேதாரண்யம் வர்த்தகர் ஒருவர் நம்மிடம், " இந்த கலவரத்திற்கு சாதி ஒரு காரணமானாலும் காவல்துறையின் அலட்சியமும் முக்கிய காரணம், தமிழகத்தில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டதாகவும், வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்காகவும் போலிஸார் முழுவதும் அங்கு பணிக்கு அனுப்பபட்டுவிட்டனர்.
பதட்டமான தொகுதியான வேதாரண்யம் காவல்நிலையத்தில் வெறும் மூன்று போலீசாரே இருந்துள்ளனர். அவர்களால் சிலையை உடைப்பதை பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை, ஒருமணி நேரம் எந்த தொந்தரவும் இல்லாமல் கலவரம் செய்தனர். பெண் காவலர்கள் சிலை உடைப்பதை படம் பிடித்தபோது சிலை உடைப்பில் கலவரக்கார இளைஞர்கள் துணிகளை தூக்கி ஆபாசமாக பேசி இதையும் படம் பிடிங்க என்று கூறும் நிலமைதான் இருந்தது, பாண்டியனின் கார் கொளுத்தப்பட்டால், கொளுத்தியர்களை எதுவும் செய்யலாம் அது தான் நியாயம் அதைவிட்டுவிட்டு சிலையை உடைத்து கலவரம் தூண்டி ஆதாயம் அடைவது என்ன நியாயம்." என்கிறார் சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சி விலகாமல்.