அரசுக்குச் சொந்தமான இடத்தினை பலரும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிற போது திருப்பித் தராமல் பொய் தகவல்களைச் சொல்லி அதைச் சொந்தமாக்கிக்கொள்ள முயன்று வருகிறார்களென ஆயிரக்கணக்கான புகார்கள் தமிழ்நாடு முழுவதுமே உள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கான அரசு மருத்துவமனை அமைக்க இடமில்லாமல் நிர்வாகம் தடுமாறியபோது தங்களுக்குச் சொந்தமான இடத்தை வழங்கியுள்ளார்கள் கூலித் தொழிலாளர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. பேரூராட்சியும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் அனுப்பியது. துணை சுகாதார நிலையம் அமைக்க 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது. நிதி வந்துவிட்டது, ஆனால் இடம் எங்கே என பேரூராட்சி, சுகாதாரத்துறை தேடத் துவங்கியது. அரசு நிலம் எங்குள்ளது என ஆய்வு செய்தபோது அதற்கான நிலம் எங்கும் இல்லாமல் இருந்தது. இதனால் கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் ராஜ்குமார் அவரது மனைவி அன்னபூரணி குடும்பத்தார் தங்களுக்குச் சொந்தமான 1305 சதுர அடியுள்ள இடத்தினை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்கத்துக்கு தானமாக வழங்குவதாகக் கூறினர். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அதிகாரிகள் கடந்த நவம்பர் 22ஆம் தேதி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதியிடம் இடத்தினை ரிஜிஸ்டர் செய்து தானமாக வழங்கினர்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலரும் வாழ்ந்து வரும் நிலையில் தங்களது இடத்தை மருத்துவமனை கட்ட தானமாக வழங்கியதைக் கேள்விப்பட்டு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.