தேனியை சேர்ந்த ராமச்சந்திரன்(35) என்பவர் கோவை மாதம்பட்டி பகுதியில் தங்கி கூலி வேலை செய்துவருகிறார். அதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன்(27) என்பவரும் மாதம்பட்டி பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பத்தன்று பிரபாகரன் அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு அருகே உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். அதேபோன்று ராமச்சந்திரனும் மதுவாங்கி கொண்டு பிராகரனுக்கு எதிராக அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
இந்த சூழலில் மது அருந்திக் கொண்டிருந்த போது ராமச்சந்திரனுக்கும், பிரபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இந்த தகராறு முற்ற, ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகரன் வலது காதை அறுத்து வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரத்த காயத்துடன் இருந்த வலியால் துடித்துக்கொண்டிருந்த பிரபாகரனை மீட்டு அக்கம்பக்கத்தினர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.