சைவ சமயத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட குன்றக்குடி ஆதீனம் மக்கள் பயன்பாட்டுக்காக 123 ஆண்டுகளுக்கு முன்னர் 13 கி.மீ தூரத்துக்கு சாலை அமைத்துக் கொடுத்த தகவல் சொல்லும் கல்வெட்டு மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகில் பள்ளபட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் வே.சிவரஞ்சனி, மாணவர்கள் ரா.கோகிலா, து.மனோஜ், வி.டோனிகா, மு.பிரவீணா ஆகியோர் கள ஆய்வின் போது, பள்ளபட்டி, அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் மந்தைத் திடல் அருகில் சாய்ந்த நிலையில் கிடந்த ஆறடி உயரமுள்ள ஒரு கல் தூணில் கல்வெட்டு இருப்பதைக் கண்டுபிடித்துப் படித்தனர். இக்கல்வெட்டில் மொத்தம் 19 வரிகள் உள்ளன. கல்வெட்டின் கீழே பெரிய மீன் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “இக்கல்வெட்டில் ‘விளம்பி வருஷம் தை மாதம் 3-ம் நாள் லெட்சுமி தாண்டவபுரத்திலிருந்து பிரான்மலை வாருப்பட்டி வரையில் திருவண்ணாமலை ஆதீனம் தாண்டவராய தேசிகர் அவர்களால் புதிதாய் போடப்பட்ட வயிரவன் சாலை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி.1899 ஆகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியமான சில சாலைகளில் மட்டுமே சரளைக்கல் போடப்பட்டிருந்தது. குதிரை, மாட்டு வண்டிகள் செல்லும் மற்ற சாலைகள் மழைக்காலங்களில் பயன்படாமல் போயின. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 40வது மடாதிபதியாக கி.பி.1893 முதல் 1902 வரை இருந்த தாண்டவராய தேசிக சுவாமிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக இச்சாலையை அமைத்துக் கொடுத்துள்ளார். இச்சாலை வயிரவன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.
சைவ சித்தாந்தத்தை வளர்ப்பதற்காக கி.பி.16-ம் நூற்றாண்டு முதல் பல சைவ ஆதீன மடங்கள் தோன்றின. இவை சைவ சமயத்தைக் காக்க பெரும்பங்காற்றியுள்ளன. சைவ மட ஆதீனம் மக்கள் நலனை முன்னிறுத்தி சாலை அமைத்துக் கொடுத்து மக்களுக்கு உதவியதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. பள்ளபட்டி எனும் இவ்வூர் பெயர் கல்வெட்டில் லெட்சுமி தாண்டவபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.”