திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஜமால் முகமது கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிறுவன நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், ஜமால் முகமது கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் இஸ்மாயில் முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் முதலமைச்சர் பேசியதாவது; “நேரில் பங்கேற்க விரும்பினாலும், வெளியூர் பயணத்தை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் திருச்சிக்கு வர இயலவில்லை. எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகிய இரண்டு அமைச்சர்களை தமிழ்நாட்டிற்கு கொடுத்த கல்லூரி ஜமால் முஹம்மது கல்லூரி. திருச்சியின் அடையாளங்களில் ஒன்று ஜமால் முஹம்மது கல்லூரி. தீரர்களின் கோட்டமான திருச்சியில் பல கல்வி கோட்டங்களும் உள்ளன. அதில் தலை சிறந்த கல்லூரி ஜமால் முஹம்மது கல்லூரி. கல்லூரி நிறுவனர்களான ஜமால் முஹம்மதும், காஜா மொய்தீனும் விடுதலை போராட்ட வீரர்கள். அது மட்டுமல்லாமல் பெரியாருடன் நெருக்கமாக இருந்தவர் காஜா மொய்தீன்.
இரண்டு நபர்கள் சேர்ந்தால் எத்தனை பேருக்கு அறிவொளி கொடுக்க முடியும் என்பதற்கு இக்கல்லூரியே சான்று. பெரும் பணக்காரர்களான இருவரும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கொடுக்க நினைத்து இக்கல்லூரியை தொடங்கினார்கள். ஏதோ கல்லூரி நடத்துகிறோம் என்று இல்லாமல் தரமான கல்வி நிறுவனமாக நடத்துவதில் கண்ணும் கருத்துமாக இக்கல்லூரியின் நிர்வாகிகள் செயல்படுகிறார்கள்.
தனித்திறமைகளை வளர்ப்பதில் அனைத்து கல்லூரிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பல்துறை திறமை உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும். அவர்களால் தான் இந்த சமூகம் மேம்படும். கல்வியில், அறிவாற்றலில் முதல்வனாக திகழவே ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் காமராஜர் ஆட்சி காலமும், கல்லூரி கல்வியில் கலைஞர் ஆட்சி காலம் பொற்காலமாக இருந்ததை போல் இந்த ஆட்சி காலம் உயர்கல்வியின் ஆராய்ச்சியில் பொற்காலமாக இருக்க வேண்டும். கல்லூரியில் சேரும் மாணவர்கள் பட்டதாரிகளாக மட்டுமல்ல, அறிவு கூர்மை உடையவர்களாக பன்முக தன்மை கொண்டவர்களாக மாற்ற திட்டமிட வேண்டும்” என்று பேசினார்.