சேலத்தில் பிரபல கார் கொள்ளையனை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் பூபதி என்கிற மைக்கண் பூபதி (32). கடந்த 2017ம் ஆண்டு, கொண்டலாம்பட்டி அருகே ஒரு கார் ஷெட்டில் பணியில் இருந்த இரவுக்காவலரை தாக்கிவிட்டு, அங்கிருந்த ஸ்கார்ப்பியோ, குவாலிஸ் ஆகிய இரண்டு கார்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிச் சென்றார்.
இச்சம்பவம் நடந்த சில நாள்களில் அதே பகுதியில் ஒருவரிடம் கத்திமுனையில் 2000 ரூபாய் பறித்தார். இது தொடர்பான வழக்குகளில் பூபதி, கூட்டாளிகள் முகைதீன் அப்துல் காதர், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருடிச்சென்ற கார்களும் மீட்கப்பட்டன.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த பூபதி, மீண்டும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பத்தில் இரண்டு கார்களை திருடினார். இந்த வழக்கிலும் பூபதியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த காளியப்பன் என்பவரையும் கடலூர் போலீசார் கைது செய்தனர்.
அந்த வழக்கிலும் ஜாமினில் வெளியே வந்த பூபதி, கடந்த 30.10.2018ம் தேதியன்று, சேலம் சொர்ணபுரி பகுதியில் ராமராஜ் என்பவரிடம் கத்தி முனையில் 1060 ரூபாயை வழிப்பறி செய்தார்.
மீண்டும் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த பூபதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் பூபதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான பூபதி என்கிற மைக்கண் பூபதி மீது சேலம் மாநகர, சேலம் மாவட்டம், நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் 23 திருட்டு உள்பட மொத்தம் 25 வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.