தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேபோல் திருவிடைமருதூர் எம்.எல்.ஏவும், அரசு கொறடாவுமான கோவி. செழியன் கும்பகோணத்தை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் கும்பகோணம், பழனி, கோவில்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து மாவட்ட உருவாக்கம் குறித்து கோரிக்கைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. அதேபோல், எட்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்களும் கடிதம் மூலம் எனக்கும் முதலமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதிநிலைக்கு ஏற்ப மாவட்டங்களைப் பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.