கும்பகோணம் வீரசைவ மடாதிபதி அமைத்துள்ள கமிட்டி போலியானது, அது ஒருபோதும் செல்லாது என முன்னாள் நிர்வாக கமிட்டியின் கூட்டத்தைக்கூட்டி தீர்மானங்கள் போட்டுள்ளனர். கும்பகோணம் வீரசைவ பெரிய மடம் மகாமகம் வடகரையில் உள்ளது. பழைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சித்திர துர்கா மடத்தின் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், வீரசைவமடத்தின் நீலகண்ட சுவாமிகள் அமைந்துள்ள கமிட்டி செல்லாது. மடத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளியிலான பூஜை பொருட்களை பெங்களூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்துள்ளதை திரும்ப மடத்திற்கு வைக்க வேண்டும். மைசூர் மகாராஜா வழங்கிய யானைத் தந்தத்தினால் ஆன பல்லக்கை மடத்திற்குள் வைக்க வேண்டும். பெங்களூர் சித்ரதுர்கா சுவாமிகளை அழைத்து கொண்டு வந்து வரும் 30 ஆம் தேதி கும்பகோணத்தில் கூட்டத்தை நடத்துவது.
வீரபத்திர சுவாமி கோவிலில் இருந்த விலைமதிப்பில்லா சோழர்கால உற்சவர் சிலை மற்றும் விலை உயர்ந்த வெள்ளி தங்கம் போன்ற அபிஷேகப் பொருட்கள் காணாமல் போனது குறித்து சிலை தடுப்புப் பிரிவு போலீசாரிடம் நீலகண்டன் மற்றும் கங்காதரன் ஆகியோர் மீது புகார் அளிப்பது. மடத்தின் கட்டிடத்தில் இயங்கி வரும் வாடகைதாரர்கள் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் கோர்ட்டில் வாடகை செலுத்த வேண்டும் என்ற சட்ட ரீதியான அறிவிப்பை வாடகைதாரர்கள் அனுப்புவது. திருவாரூர் பிடாரி கோயில் தெருவில் உள்ள வீர சைவ மடத்தின் சொத்துக்களை கபளீகரம் செய்யும் நீலகண்டன் கங்காதரன் மற்றும் நில அபகரிப்பு ஈடுபட்டோர் மீது நில அபகரிப்பு போலீசாரிடம் புகார் அளிப்பது. நீலகண்டன் வீர சைவ மடத்தின் மடாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்வது," என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதுகுறித்து விசாரித்தோம், " வீரசைவ பெரிய மடத்தில் சமீப காலமாக பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. தற்போது மடாதிபதியாக இருக்கும் நீலகண்டர் தங்களுக்கு சாதகமான நிர்வாக குழுவை அமைத்து இருக்கிறார். அதேபோல் அவர் வசதிக்காக கங்காதரனையும் இளைய மடாதிபதியாக நியமித்து பிறகு நீக்கினார். இந்த நிலையில் பழைய நிர்வாக குழு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததோடு, சித்திரை துர்கா மடத்தில் உள்ள பசவ மூர்த்தியை புதிய மடமாக நியமித்து முடிசூட்டி சர்ச்சையை கிளப்பினர்.
இந்த நிலையில் கும்பகோணம் ஆர்,டி,ஓ, தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பழைய மடாதிபதியே நீடிப்பார் புதிய மடாதிபதி நியமானம் செல்லாது என கூறினார். இதுகுறித்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என கூறி விட்டார். இதற்கிடையில் புதிய நிர்வாக குழுவை அமைத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் நீலகண்டர். பழைய நிர்வாக குழுவினர், புதிய நிர்வாகக் குழு செல்லாது எனவும் நீலகண்டர் மடாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் என்றும் கூறி வருகின்றனர்.