வழக்கறிஞர்கள் போர்வையில் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமுக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்க தலைவர் லோகநாதன் தலைமை வகித்து தீர்மானங்களை வாசித்தார். அதில், "வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பை முடித்து கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக வேலை பார்த்து வருபவர்கள் வக்கீல்களாக பதிவு செய்திருந்தால் அவர்கள் தங்களது சான்றிதழ்களை பார்கவுன்சில் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் எடுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் முழுஒத்துழைப்பை தரும்.
வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் பல்வேறு வாகனங்களில் ஒட்டிக்கொண்டு அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். போலியாக வழக்கறிஞர்களின் ஸ்டிக்கரை பயன்படுத்தும் நபர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பை தறுவோம்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இது குறித்து வழக்கறிஞர் சங்க பொருப்பாளர்களிடம் விசாரித்தோம், "ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் காசுகொடுத்து சட்டப்படிப்பிற்கான டிகிரியை வாங்கிக்கொண்டு, முடித்தும் முடிக்காமலும் அரியர்களோடு வழக்கறிஞர்கள் அணியும் கருப்புக்கோட்டை அணிந்துகொண்டு, வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் என்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படிபட்டவர்கள் பெரும்பாலும் சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக நின்றுகொண்டு மக்களை மிரட்டுகின்றனர். அதோடு மணல் மாபியாக்களுக்கு கைக்கூலிகளாகவே மாறிவிட்டனர்.
படிப்பை முடிக்காமலேயே வழக்கறிஞராக பதிவு செய்யாமல், வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சிலில் வழங்கப்படும் ஸ்டிக்கரை கடைகளில் வாங்கி ஒட்டிக்கொண்டு நீதிமன்றங்களுக்கே வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. மகன் வழக்கறிஞருக்கு படித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தந்தையும் அண்ணன்களும், தம்பிகளும் வழக்கறிஞர் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு பல்வேறு தவறான வேலைகளில் ஈடுபடுவது கும்பகோணம் பகுதியில் அதிகமாகவே பார்க்க முடிந்தது அதனால் இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்," என்கிறார்கள்.