Skip to main content

கும்பகோணத்தில் தொடரும் கொலைகள்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Kumbakonam lawyer incident

 

கோயில்கள் நிரம்பிய நாச்சியார் கோயில் பகுதி, சமீபகாலமாக கொலை கூடாரமாக மாறி வருகிறது. ஏற்கனவே நடந்த கொலைகளுக்கு முடிவு தெரியாத நிலையில், வழக்கறிஞர் உள்ளிட்ட இரண்டு பேர், ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பழவர்த்தான் கட்டளை, குப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் வயது 45. வழக்கறிஞரான இவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கும்பகோணம் நகரப் பொறுப்பாளராக இருந்துவருகிறார். காமராஜுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

 

இந்நிலையில், திங்கள் இரவு கும்பகோணத்தில் இருந்து பிளாஞ்சேரி சாலையில் காமராஜ் மற்றும் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (35) என்பவருடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் வழிமறித்தனர். இரவில் திடீரென தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் சிலர் மறிப்பதை பதட்டத்துடன் கவனித்து, அருகே வருவதற்கு முன்பே, சந்தேகமடைந்த காமராஜும் அவரது நண்பரும் பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

 

ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காமராஜரையும், அவரது நண்பர் சக்திவேலையும் சரமாரியாக வெட்டினர். பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலையாளிகளிடம் இருந்து தப்பி ஓடிய சக்திவேல் அருகே உள்ள வயலில் விழுந்து பரிதாபமாக இறந்தார். கொலையாளிகளிடம் சிக்கிய காமராஜ் தலைசிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தகவலறிந்த திருவிடைமருதூர் பகுதி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று காமராஜ் மற்றும் சக்திவேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடம் காமராஜின் வீட்டிற்கு அருகே உள்ள பகுதி என்பதால், அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது.

 

Ad

 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம், "நாச்சியார்கோவில் காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்தின் கூடாரமாகவே சமீப காலமாக மாறிவிட்டது. மணல் கடத்தல், சாராயக் கடத்தல், கள்ள மதுவிற்பனை என பணம் மட்டுமே புழங்கும் நிலையமாக மாறி விட்டது. இங்கு ஏற்கனவே பல கொலைகள் நடந்திருக்கிறது, அதற்கு முடிவு இல்லாமலேயே தொடர்ந்து வருகிறது" என்கிறார் அச்சத்துடன்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்