Skip to main content

கும்பகோணம் இரட்டைக் கொலை விவகாரம்; இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்! 

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Kumbakonam lawyer case; Inspector Suspended!

 

கும்பகோணம் இரட்டைக் கொலை வழக்கில் அஜாக்கிரதையாகச் செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர் ரேகாராணியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகேஷ் குமார் மீனா.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட, குப்பன்குளம் கிளாரட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ். அவருக்கும் அவரது உறவினரான ராஜவேலுவிற்கும் சமீக நாட்களாகச் சொத்துப் பிரச்சனை, தகராறாக முற்றிவந்தது. இது குறித்து நாச்சியார்கோவில் காவல்நிலையத்தில் ஆய்வாளர் ரேகாராணியிடம் இரு தரப்பினரும் கடந்த 10ஆம் தேதி புகார் செய்தனர். புகாரை பெற்ற ஆய்வாளர் ரேகாராணி, புகார்மீது சரிவர அக்கறை காட்டாததால் இருதரப்பிற்கும் அங்கேயே மோதல் வெடித்திருக்கிறது. அதில், கையில் காயமுற்ற ராஜவேலு கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

 

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு வழக்கறிஞர் காமராஜும் அவரது நண்பர் சக்திவேலுவும் மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது ராஜவேலுவின் மகன் ஆனந்தும் அவரது நண்பர்களும் கூலிப்படையினரின் உதவியோடு வழக்கறிஞர் காமராஜையும், சக்திவேலையும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப் பதிந்து ராஜவேலுவின் மகன் ஆனந்த் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். ஆனாலும் இரட்டைக் கொலை விவகாரம் கும்பகோணம் பகுதியைப் பரபரக்க செய்தது. தஞ்சை சரக டி.ஐ.ஜி மூன்று மாவட்ட எஸ்.பி டி.எஸ்.பிக்கள் என போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களும், உறவினர்களும் இரட்டைக் கொலைக்கு காரணம் காவல்துறையினரின் அலட்சியம்தான் எனக் குற்றம் சாட்டினர், (இதனை நமது நக்கீரன் இணையத்தில் செய்தியாக்கியிருந்தோம்) 

 

இந்தச் சூழலில் நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தபோதே பிரச்சனையைத் தீர்த்து வைத்திருந்தால் இரட்டைக் கொலை சம்பவம் நடந்திருக்காது என்றும் பணியில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதாகவும் கூறி நாச்சியார்கோயில் இன்ஸ்பெக்டர் ரேகாராணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகேஷ் குமார் மீனா உத்தரவிட்டிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்