கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தனது தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் தாலுகா ஆறுதேசம் கிராமத்தை சேர்ந்த 100- க்கு மேற்பட்ட மக்களுடன் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார்.
பின்னர் அந்த மனு குறித்துப் பேசிய எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ''ஆறுதேசம் கிராமத்தில் 50-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அங்கு வீடு கட்டி வசித்து வருகின்றனர் . காமராஜர் ஆட்சி காலத்திலிருந்தே அங்கு பரம்பரையாக வசித்துவரும் மக்கள் சொத்து வரியையும் முறையாக அரசுக்கு செலுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2016-ல் இருந்து திடீரென்று அந்த குடியிருப்பு வாசிகளிடமிருந்து சொத்துவரி வசூலிப்பதைப் பேரூராட்சி நிர்வாகம் நிறுத்தியது. இதுபற்றி அந்த மக்கள் நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது, நீங்கள் ஒரு மடத்துக்குச் சொந்தமான இடத்தில் வீடுகட்டி வசித்து வருகிறீார்கள். அதனால் நீங்கள் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாட முடியாது எனக் கூறியுள்ளனர். இது அந்த குடியிருப்பு வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த மக்கள் இந்த இடம் மடத்துக்குச் சொந்தமானதாக எந்த ஆதாரமும் இல்லை. அது பாரம்பரியமாக எங்களுடைய சொத்து என்றுள்ளனர்.
சொத்து வாி வசூலிக்காததால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த மக்களுக்கு அரசு உதவி பெற முடியவில்லை. மேலும் வங்கிகளுக்குச் சென்று விவசாயக் கடன் உள்ளிட்ட எந்த கடன்களும் வாங்க முடியாமல் அந்த மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கைக்கு நிலையான ஆதாயம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
எனவே 2016- க்கு முன்னதுபோல் சொத்து வரியை வசூலிக்க வேண்டுமென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். அதற்கு கலெக்டா் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்'' என்றார்.