ப.சிதம்பரம் என்ன தவறு செய்தார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, பிரதமர் மோடியை விமர்சித்தால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது. என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம் என கேள்வி எழுப்பியுள்ளார்.