இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்திய அரசியல் தலைமைகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரது செல்ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாட்டுத் தலைவர்களின் உரையாடல்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றுது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, "மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும். உளவு பார்த்ததன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மையை மோடி அரசு தகர்த்துவிட்டது. எனவே ஒட்டுமொத்தமாக அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.