கிருஷ்ணகிரி அருகே, தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த செவிலியரை அவருடைய கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, எதுவுமே நடக்காததுபோல வீட்டு முன்பு கட்டில் போட்டு படுத்து தூங்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள கங்கோஜி கொத்தூரைச் சேர்ந்தவர் நடராஜ் (40). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி பிரியா. கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரியா, செவிலியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். நடராஜூக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், பிப். 9ம் தேதி இரவு, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நடராஜ் ஆத்திரத்தில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, பிரியாவை கழுத்து அறுத்துக் கொலை செய்தார். அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அக்கம்பக்கத்தில் வீடுகள் இல்லாததால், இச்சம்பவத்தால் அப்பகுதியில் எந்த பரபரப்பும் காணப்படவில்லை. மனைவியை கொலை செய்த நடராஜ், குற்ற உணர்வே இல்லாமல் வீட்டு வாசலில் கட்டில் போட்டு படுத்துத் தூங்கினார்.
மறுநாள் காலையில் உறவினர்கள் யதார்த்தமாக அவருடைய வீட்டுக்கு வந்தபோதுதான், தான் மனைவியை கத்தியால் கழுத்து அறுத்துக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரத்தம் தோய்ந்த நிலையில் பிரியா சடலமாகக் கிடந்தார்.
இச்சம்பவம் குறித்த தகவலின்பேரில், ஏடிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.