தமிழகத்தை ஆளும் அதிமுகவின் முன்னால் பொதுச்செயலாளரும், முன்னால் முதல்வருமான ஜெ. வின் பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ந்தேதி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பேனர், கட்-அவுட் வைக்க நீதிமன்றத்தில் அதிமுக அனுமதி கேட்டபோது, கடுமையாக மறுத்துவிட்டது நீதிமன்றம்.
இந்நிலையில் அதேகட்சியை சேர்ந்த மாநில விவசாய அணி அமைப்பாளரும், முன்னால் அமைச்சருமான திருவண்ணாமலையை சேர்ந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமணம் கடந்த பிப்ரவரி 15ந்தேதி திருப்பதியில் நடைபெற்றது. அந்த தம்பதியின் வரவேற்பு கலசபாக்கத்தில் உள்ள அரவிந்தர் விவசாய கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மேடை அமைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்த திருமணத்துக்கு முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி முதல் அவரது அமைச்சரவை, அதிமுகவின் முக்கிய தலைவர்கள் என அனைவரும் வரவுள்ளதாக கூறி வரவேற்பு நிகழ்வுக்கு இடத்துக்கு வரும் வழி நெடுக்கிலும் முக்கியமாக சித்தூர் – கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் சாலையில் குழி தோண்டி பேனர்களும், சாலையை குறுக்கி வளைவுகள் என தூள் பரப்பிக்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகள் தொடர்பாக இந்த சாலையில் செல்லும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் என யாரும் கண்டுக்கொள்ளவில்லை. ஆளும்கட்சி என்கிற பயத்தில் பயந்து கண்டும் காணாமல் செல்கின்றனர்.
இந்த விதிமீறல்களை பார்த்து சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை ஒரு முன்னால் அமைச்சரே மதிக்கவில்லை, அதிகாரிகளும் கண்டுக்கொள்ளாதது அதிர்ச்சியாகவுள்ளது என்றனர்.