இந்தியாவில் 2023 - 2024 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 25 ஆம் தேதி தொடங்கி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறப்புப் பிரிவில் அரசுப் பள்ளிக்கான 7.5% ஒதுக்கீட்டில் மாணவர்கள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் இராணுவப் படை வீரர்களின் பிள்ளைகள் உள்ளிட்டோர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
இந்நிலையில், 2016ல் 12 ஆம் வகுப்பு முடித்து, பின் சிறப்புக் காவல்படையில் பணியாற்றி வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு, பி.எஸ்.சி. வேதியியல் இளநிலையை முடித்தார். இவரது கனவான மருத்துவப் படிப்பில் சேர்வதற்குள் தமிழ்நாட்டில் நீட் வந்ததால் அவரால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் போனது. பிறகு 2020ல் காவல்துறையில் இணைந்து, ஆவடி சிறப்புக் காவல் படையில் பணியாற்றிவந்தார்.
இருந்தபோதும், தனது மருத்துவக் கனவிற்காகத் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவந்த சிவராஜ், கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார். ஆனால், அதில் போதிய மதிப்பெண் கிடைக்காததால், மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார். அதில் அவர் 400 மதிப்பெண் பெற்றார். பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த சிவராஜ்க்கு தற்போது மருத்துவப் படிப்பிற்கான சீட் கிடைத்துள்ளது.