கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த பழனிக்குமாருக்கும், அவரது மனைவி செண்பகலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதுதொடர்பாக செண்பகலட்சுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (18-08-2019) அதிகாலை 2:30 மணிக்கு பழனிக்குமாரின் வீட்டிற்கு சென்ற, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இசக்கிராஜா, பழனிக்குமாரை கண்மூடித்தனமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த பழனிக்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறை அல்ல. இதற்கு முன் பேருந்து டிரைவர் ஒருவரை தாக்கியதால் ஒட்டுமொத்த ஓட்டுனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்னர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் ஒருவரை தாக்கியதால் பிரச்சனையில் சிக்கினார். இப்போது, பொறியாளர் ஒருவரை தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் இந்த வழக்கை மகளிர் போலீஸார் விசாரித்து வரும் நிலையில், பெண்ணின் உறவினர் என்ற முறையில் பேச வந்ததாக கூறி, தாக்குதல் நடத்தியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
“கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும்போது, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான் காவல் துறையின் வேலை. அதைவிடுத்து அர்த்த ராத்திரியில் வந்து வீடு புகுந்து தாக்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்கிறார் பழனிக்குமாரின் தந்தை ராமமூர்த்தி.
“போனில் இசக்கிராஜா அழைத்தார் என்பதற்காக ஏற்கனவே 2 முறை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றேன். ஆனால், அவர் அங்கு இல்லை. இன்றைக்கு அதிகாலையில் வந்து ஸ்டேசனுக்கு கூப்பிட்டால் வரமாட்டியா? என்று கேட்டு என்னை அடித்து உதைத்தார். அதுவும் நான் விசாரிக்க வரவில்லை. பெண்ணின் உறவினர் என்ற அடிப்படையில் பேச வந்தேன் என்று கூறிவிட்டு தாக்கினார்”என்பது பழனிக்குமாரின் குற்றச்சாட்டு ஆகும்.
சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் குறிப்பிட்ட சில ரௌடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் எஸ்.ஐ.இசக்கிராஜா. அதேபோல், வழக்கு விவகாரங்களிலும் அதிரடி காட்டினார். இதனால், அவரை மக்கள் ஹீரோவாக பார்த்தனர். ஆனால், சில பிரச்சனைகளில் கொஞ்சம் எல்லை மீறிச் சென்றது, அவரை வில்லனாக பார்க்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. போலீஸ் வில்லனாக மாறுவது நல்லது அல்ல!