Skip to main content

பொள்ளாச்சி குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்! திருச்சி மாணவர்கள் போராட்டம் ! 

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலம் மாணவிகள், இளம்பெண்களிடம் பழகி அவர்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

t

 

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

இந்த நிலையில் திருச்சியில் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பகலில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை தூக்கில் போட வேண்டும், உண்மையான நபர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி மாணவ-மாணவிகள்ஊர்வலமாக டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி புறப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

 

இது குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவ- மாணவிகளை திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு முன்பாக தடுத்து நிறுத்தினர்.

 

t

 

மாணவ-மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஊர்வலத்தை கைவிட மறுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அருகில் உள்ள மண்டபத்தில் அவர்களை தங்க வைத்தனர்.

 

இதில் 34 மாணவிகள் உள்பட மொத்தம் 81 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

.இது போன்று ஈ.வே.ரா. பெரியார் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வாசலில் குழுமி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனே நீதி வேண்டும் என்றும் மனித மிருங்கள் உடனே தூக்கில் போட வேண்டும் என்று கோஷ்கள் எழுப்பி தங்கள் எதிர்குரல்களை எழுப்பிய பின்பு கலைந்து சென்றனர். இந்த கண்டன ஆர்பாட்டத்தை புரட்சிகார மாணவர்கள் முன்னணி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.   இதே போல தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்