ஃபாத்திமாவின் மரணம் அவளின் குடும்பத்தினரை மட்டுமல்ல கொல்லம் நகரத்தையை அதிா்ச்சிக்குள்ளாக்கியது எனலாம்.
இந்த நிலையில் ஃபாத்திமா குடும்பம் வசித்த கொல்லம் கிளிகொல்லூா் நகர குடியிருப்போா் சங்க தலைவா் ஆதம்ராஜ் நம்மிடம் பேசும் போது, "பாத்திமாவால் கிளிகொல்லூா் நகரம் பெருமைப்படும் என்றிருந்தோம். ஆனால் அந்த கனவை சென்னை ஐஐடி சிதைத்து விட்டது. நுழைவு தோ்வில் முதல் ரேங்க் எடுத்த பாத்திமாவுக்கு பெரும் பாராட்டு விழாவை நடத்தி அவளை வாழ்த்தி சென்னைக்கு அனுப்பினோம்.
ஆனால் சென்னை ஐஐடி 4 மாதத்தில் அவளையும், அவளுடைய எதிா்கால கனவையும் பிணமாக்கி திரும்ப கொல்லத்துக்கு அனுப்பிவிட்டது. கிளிகொல்லூா் நகர வித்தியாா்த்திகள் (மாணவா்கள்) பாத்திமாவை ஓரு ரோல் மாடலாக நினைத்து இருந்தனா். அந்தளவு பாத்திமா கல்வி அறிவும், திறமையும், சமூக அக்கறையும் கொண்டவள். இந்தியாவின் உயா்ந்த பதவிக்கு வந்து அந்த பதவி மூலம் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை உயர கொண்டு வர வேண்டும் என்ற லட்சிய கனவோடு இருந்தவள் பாத்திமா.
அவளுக்குள் இருந்த நல்ல எண்ணத்துக்கு அவளின் பெயா் என்றைக்கும் நிலைத்து நிற்கும் விதமாக அவள் ஒடியாடி விளையாடிய தெருவுக்கு பாத்திமா என்ற பெயரை சூட்டவிருக்கிறோம்" என கூறினாா்.