கோடநாடு பங்களாவில் மர்மமான முறையில் கொலை, கொள்ளை, தற்கொலை நடைபெற்றுள்ளது. கோடநாடு சம்பவத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
கொடநாடு பங்களாவில் மர்மமான மரணங்கள், திருட்டுக்கள், கொள்ளைகள், கொலைகள், தற்கொலைகள், விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. இதில் குறிப்பாக கோடநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார்.
சயான் என்பவர் மனைவியும், மகளும் சாலை விபத்தில் இறந்து போயிருக்கின்றனர். இந்த தற்கொலை, கொலை பின்னணியில் உள்ளவர் யார் என்ற ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. அதைதான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் அவர்கள் விசாரணை நடத்தி இருக்கிறார்.
நேற்று முன்தினம் டெல்லியில் அது தொடர்பான குறும்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து எந்த முறையான பதிலும் சொல்லாமல் வழக்கு நடக்கிறது என்று சொல்லிவிட்டு இது அரசியல் சதி என்று பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி . அந்த பேட்டியில் கூட பார்த்தால் தெரியும் அவரது முகம் இருண்டுபோய் இருக்கிறது எனக்கு தெளிவாக தெரிகிறது. கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்று சொல்ல முடியுமா? இந்த புகாரை விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அவரால் சொல்ல முடியுமா? இந்த ஐந்து பேர் மரணம் கொலைதான் என்றும், எடப்பாடி சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் மேத்யூ சாமுவேல் சொல்லியிருக்கிறார். உடனே அவர் மீது வழக்கு போடுகிறார் என்றால் ஏன்?.
இதுவரை கிடைத்த வாக்குமூலங்களை மக்களுக்கு தெரியப்படுத்த தயாராக இருக்கிறாரா எடப்பாடி. சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்க முடியாத சூழ்நிலையில் இன்று திக்குமுக்காடி கொண்டிருக்கிறது சிபிஐ. எனவே சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைத்து, அமைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த விசாரணை ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விசாரணை ஆணையம் எடப்பாடியை மட்டுமல்ல இன்றைய அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் என அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்பதுதான் நல்லது என கூறிய அவர் ஆளுநர் நேரம் அளித்தால் நாளையே சென்று சந்திக்க உள்ளோம் எனவும் கூறினார்.