கொடைக்கானலில், மூன்றாவது நாளாக, தொடர் மழை பெய்து வருவதாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாலும், அப்பகுதி தனித் தீவாக மாறியுள்ளது.
'புரெவி' புயல் காரணமாக கடந்த 2 -ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, தொடர்ந்து மூன்றாவது நாளாக இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதனால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் உள்ள மரம் முறிந்து விழுந்தது. பூம்பாறை செல்லும் சாலையில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் மரங்கள் விழுந்ததால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்-பழநி சாலையில் கோம்பைக்காடு பகுதியில் தடுப்புச் சுவரில் மண்ணரிப்பு ஏற்பட்டது. அதுபோல் அங்கங்கே சிறுபாறைகளும் உருண்டு விழுந்தது. அதை உடனடியாகச் சீரமைக்க தீயணைப்புப் படையினர் வந்து மரங்களை அப்புறப்படுத்தினர். அப்படி இருந்தும் தொடர்ந்து ஆங்காங்கே மரங்கள் விழுவதும் சிறுபாறைகள் விழுவதுமாக இருந்து வருகிறது.
கொடைக்கானலில் கனமழை எச்சரிக்கை காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டது. வெளியூர் வாகனங்கள் வருவதற்கும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள், சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் வாகனங்களைக் கண்காணிக்க அடுக்கம் சாலை, பழனி சாலை ஆகிய இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுபோல், கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மலைக் கிராமங்களிலும் மின் விநியோகம் மற்றும் தொலைத்தொடர்பு வசதி கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தனித் தீவில் வசிப்பது போன்ற நிலையில் உள்ளனர்.
கொடைக்கானல்-பழனி சாலையில் இரண்டாவது நாளாக மண்சரிவு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைக் காலத்திற்கு முன்பே, சேதம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, மக்களுக்குப் பயன் தராத, உயர்ந்து வளர்ந்து குறிப்பிட்ட மரங்கள் முறிந்து விழும் சமயங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்படுகிறது. நிலத்தடி நீரைப் பெருமளவு உறிஞ்சும் இந்த மரங்களை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தபோதிலும், இன்னும் இந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
தற்போது குறைந்த அளவு மீட்புப் படையினரே உள்ளனர். அவர்களும் சேதம் அடைந்த இடங்களில் மரங்களை அகற்றும் பணியிலும், மின் வயர்களை சீரமைக்கும் பணியலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மீட்புப் படையினரை கொடைக்கானலுக்கு விரைவாக அனுப்பி, ஏற்கனவே புயல் காலங்களில் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, அங்கு முன்னேற்பாடு பணிகளைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, கரடி சோலை அருவி உள்பட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகருக்குக் குடிநீர் வழங்கும் அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.