திருக்காரவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு காத்திருப்பு 2 வது நாள் போராட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை மாவட்ட எம்,எல்,ஏவுமான தமிமுன்அன்சாரி கலந்துக்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் துவங்கி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வரையில் சுமார் 474.19சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நஞ்சையும் புஞ்சையும் கலந்த நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் தியாக டெல்டா மாவட்டம் முழுவதும் பரவ போராட்டம் தீவிரமடைந்தது. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று திருக்காரவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து உண்ணாநிலை அறப் போராட்டத்தை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கு முன்பு திமுக சார்பில் சைக்கிள் பேரணி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி பிரச்சார போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீப்பந்தம் ஏந்தி பிரச்சார போராட்டம், முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் திருவாரூர் கல்லூரி மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் என நடத்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் குடியரசு தினத்தன்று நடந்த போராட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை இரவு நேரகாத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்திருந்தனர். அதன்படி 27ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து போராட்டம் தொடங்கி நடத்திவருகின்றனர்.
28ஆம் தேதி இரவு இரண்டாவது நாள் காத்திருப்பு போராட்டத்தில் நாகை மாவட்ட எம்எல்ஏ வான தமிமுன்சாரியும், விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பி,ஆர் பாண்டியனும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஹைட்ரோகார்பன் குறித்தான விழிப்புணர்வு செய்திகளை பதிவு செய்தனர் .
பெண்கள் ஆண்கள் என பலரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வருகின்றனர்.