Skip to main content

மாவட்டங்களுக்குள் இ-பாஸ் முறையைக் கைவிடுக... -கொ.ம.தே.க. ஈஸ்வரன் வேண்டுகோள்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

kdmk

 

"வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்குள் பயணிக்க தேவையான இ-பாஸ் முறையைக் கைவிட வேண்டும்." எனக் கூறியிருக்கிறார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர் .ஈஸ்வரன் இது சம்பந்தமாக அவர் விரிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழக அரசு ஊரடங்கில் எவ்வளவு தளர்வுகள் அறிவித்தாலும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதால் தொழில்துறை இயங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுமே இ-பாஸ் பெற்று பயணிப்பது என்பது இயலாத ஒரு காரியம். மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக உண்மைநிலை சொல்லி அரசு கேட்கும் தகவல்கள் அனைத்தையும் கொடுத்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்கு செல்பவர்கள் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடிவதில்லை.

பக்கத்து மாவட்டத்தில் உள்ள பெற்றோரைப் பார்க்க முடியாமல் பிள்ளைகளும், பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் பெற்றோரும் பாசப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய காரணங்களுக்காக வெளியே பயணிக்க முடியாமல் பலர் மனவேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். படித்த விழிப்புணர்வு உள்ளவர்களுக்கே இ-பாஸ் முறை மிகவும் சிரமமானதாக இருக்கிறது. படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால் படிப்பு அறிவில்லாத சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில்களைச் செய்பவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை மற்ற மாவட்டங்களில் உள்ள பெரும் நிறுவனங்களுக்கு அனுப்ப முடியவில்லை.

இதனால் தொழில் நிறுவனங்களை தொடர்ச்சியாக நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் வேலையாட்களைக் குறைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். தினந்தோறும் பக்கத்து மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இ-பாஸ் முறையினால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அதேபோல ஊரடங்கினால் சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்களை நிறுவனங்கள் அழைத்தும் பணிக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். அரசின் உத்தரவை மதித்து இ-பாஸ் விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படுவது ஏன் ?.

விவசாயிகளும் இ-பாஸ் முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிருக்கும் மாவட்டமும், விவசாய நிலம் இருக்கும் மாவட்டமும் வேறுவேறாக இருப்பதால் விவசாயப் பணிகளில் ஈடுபட முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அருகருகே உள்ள மாவட்டங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டினால் விளைவித்த பொருட்களை விற்க முடியாமலும், வியாபாரிகள் வாங்க முடியாமலும் செய்வதறியாமல் இருக்கிறார்கள். விளைவித்த பொருட்கள் வீணாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இ-பாஸ் முறையைக் கைவிட்டால் மட்டுமே அனைத்துத் தொழில்களும் வேகமெடுக்கும். இதுவே இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். பல தளர்வுகள் கொடுத்திருந்தாலும் இ-பாஸ் முறையில் மக்களுக்கு உள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு இன்றைக்குக் கைவிடுவது சாலச்சிறந்ததாக இருக்கும் என்று தமிழக அரசையும், தமிழக முதலமைச்சரையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது." எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்