முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றி ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பிய கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.பி, எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் பற்றியும் அருவருப்பாகப் பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் கிஷோர் கே சாமி. சாதி, மத ரீதியாகவும் பத்திரிக்கையாளர்கள் குறித்தும் அவதூறு பதிவிட்டு வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பயிற்சி தந்து அர்ச்சகர் பணியில் ஈடுபடுத்த முடிவு எடுத்துள்ளோம். பெண்கள் அர்ச்சகர் பயிற்சி எடுக்க விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து அர்ச்சகராக்குவதற்கு உண்டான முயற்சியை முதல்வர் அனுமதியுடன் மேற்கொள்வோம் என தெரிவித்தார். இதுதொடர்பாகவும் கிஷோர் கே சாமி விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில்தான் காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பம்மலைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சங்கர் நகர் காவல்துறை, அவரை நள்ளிரவில் கைது செய்துள்ளது.
மாதவரத்தில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சாமியை வரும் 28ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் பற்றி அவதூறு பேசியதாக கிஷோர் கே சாமி மீது ஐபிசி 153, 505 (1-பி), 505 (1-சி) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கிஷோர் கே சாமி மீது மாற்றத்திற்கான ஊடக மையம் கடந்த அதிமுக ஆட்சியில் புகார் அளித்தருந்தது. அப்போது போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
''முன்ஜாமீன் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு ஏற்கனவே குட்டு வைத்தும் கிஷோர் கே சாமி திருந்தவில்லை. பெண்கள் குறித்து அவரது பதிவுகள் கேவலமான எண்ணம் கொண்டவை. பெண்களைப் பற்றி குரூரமான, கேவலமான பதிவுகளை கிஷோர் கே சாமி பதிவிட்டுள்ளார். பெண்கள் குறித்த கிஷோர் கே சாமியின் பதிவுகள் அவரது வக்கிரபுத்தியைக் காட்டுகிறது'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.