விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ளது பாதி ராப்புலியூர். இந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 17ம் தேதி முதல் காணவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு ஊர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தேடிப் பார்த்தனர். பின்னர் தீவிரமாக உறவினர்கள், ஊர்காரர்களிடம் விசாரித்ததில், அதே ஊரைச் சேர்ந்த சாமிமலை என்ற லட்சுமணன் (வயது 27) தங்கள் மகளை கடத்தி சென்று இருக்கலாம் என்று மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, எஸ்.ஐ. செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை முடிச்சூர் பகுதியில் தங்கியிருந்த சிறுமி மற்றும் சாமிமலை ஆகிய இருவரையும் மீட்டு மயிலம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு பிறகு சிறுமியை கடத்தி பாலியல் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக சாமிமலையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சாமிமலை நீதிமன்ற உத்தரவுப்படி கரோனா பரிசோதனை பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியை நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தைகள் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.