சேலத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி, ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திச்சென்று பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடியைச் சேர்ந்த மணி மகன் சுரேஷ் (வயது 42). கடந்த ஜனவரி 13- ஆம் தேதி, சேலம் சூரமங்கலம் தியாகபிரம்மன் தெருவில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை, சுரேஷூம், அவருடைய கூட்டாளிகள் ஐந்து பேரும் வீடு புகுந்து, தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக்கூறி, திடீரென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரியல் எஸ்டேட் அதிபரை கடுமையாக தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி, விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும், அவருடைய இரண்டு சொகுசு கார்களையும் எடுத்துக்கொண்டு, அவரையும் கடத்திச்சென்று, 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.
மிரட்டலுக்கு அஞ்சிய ரியல் எஸ்டேட் அதிபர், தனது வங்கிக் கணக்கில் இருந்து 7.60 லட்சம் ரூபாய் எடுத்துக் கொடுத்துள்ளார். அதன் பிறகே அவரை விடுவித்து விட்டு, ரவுடி சுரேஷ் உள்ளிட்டோர் தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த ரியல் எஸ்டேட் அதிபர் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த சுரேஷை கடந்த மாதம் கைது செய்தனர். விசாரணையில், சுரேஷூம், அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாப்பிரெட்டிப்பட்டியில் வயதான தம்பதியிடம் கத்தி முனையில் 25 பவுன் நகை பறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொம்மிடி, கோட்டமேடு பகுதியில் லாரி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
சுரேஷ், குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைத்தாலும், பிணையில் வெளியே வந்து மீண்டும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்தது.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வருவதால் சுரேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்படி, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷிடம், கைது ஆணை ஏப். 27- ஆம் தேதி வழங்கப்பட்டது.