தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கரை சந்தித்து 2021 முதல் தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் அடங்கிய கோப்பை ஒப்படைத்தார். மேலும் இந்த வழக்குகள் எந்த நிலையில் உள்ளன. புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இது தொடர்பான விரிவான அறிக்கையை ஒரு மாதத்துக்குள் ஒப்படைப்பதாகக் கூடுதல் டிஜிபி சங்கர், குஷ்புவிடம் உறுதியளித்தார்.
இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ள வழக்குகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டிஜிபி சங்கரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். அவரும் இதுகுறித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 700க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து பதிவு செய்த 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையினர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக வரதட்சணை கொடுமை வழக்குகள் தான் அதிகமாக உள்ளன. பெண்கள் அளிக்கும் வரதட்சணை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.