ஆட்டுக்கறியின் விலை அதிகமாகக் கூறி கறிக்கடை ஊழியர்களை, கேரள இளைஞர்கள் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் அபி. இவர் மரக்காணம் சாலையில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், ஹபி, நிகில் பாபு மற்றும் விஜி ஆகிய நால்வரும் ஆட்டுக்கறி வாங்க வந்தனர்.
அப்போது, விலை அதிகமாக இருப்பதாகக் கூறி ஆட்டுக்கடை ஊழியருக்கும், கேரள இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியது. இதனால், ஆத்திரமடைந்த கேரள இளைஞர்கள், இறைச்சிக் கடையில் இருந்த கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு இறைச்சிக் கடை ஊழியரைத் தாக்க முயன்றனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்த வந்த காவல்துறையினர், போதையில் ரகளையில் ஈடுபட்ட கேரள இளைஞர்கள் நால்வரையும் சரமாரியாக வெளுத்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறைச்சிக்கடையில் கேரள இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.