சேலம் வழியாகச் சென்ற கேரளா விரைவு ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மற்றொருபுறம், உள்ளூர் ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது அதிரடி வேட்டை நடத்தி, கஞ்சா கடத்தல் ஆசாமிகளை பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் ரயில்வே பாதுகாப்புப்படை (ஆர்பிஎப்) பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரகுமார் மீனா தலைமையில் காவல்துறையினர், சேலம் வழியாக கேரளா செல்லும் தன்பாத் & ஆலப்புழா விரைவு ரயிலில் திங்கள்கிழமை (மே 9) காலை திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை சங்ககிரி வரை தொடர்ந்தது. சங்ககிரி அருகே சென்றபோது பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பை இருந்தது. பயணிகளிடம் விசாரித்தபோது அந்தப் பைக்கு உரியவர் யார் என்று தெரியவில்லை. கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அதில் நான்கு பார்சல்கள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்ததில் அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
கஞ்சா கடத்தி வந்த ஆசாமிகள், காவல்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து அங்கேயே வைத்துவிட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து 8 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சேலம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ஒப்படைத்தனர். இப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.