சந்தீப் மேத்தா, ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் ஆவார். இவர், கேரள கடற்கரை பகுதியில் தடையை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடையவர். இவருடைய முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கேரள கடற்கரை பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியது தொடர்பான முறைகேட்டில் முன்ஜாமின் பெற்றவர் சந்தீப் மேத்தா. இந்நிலையில், முன்ஜாமின் உத்தரவில் தவறான குற்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளதால், உத்தரவில் திருத்தம் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரர் கேரளா தொடங்கி பல்வேறு மாநிலங்களிலும் அலுவலகம் வைத்து நடத்தி வருவதாகவும், அவர் பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை தேர்ந்தெடுத்து முன்ஜாமீன் பெற்றுள்ளதாக வாதிட்டார்.
மேலும், கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்துக்குட்பட்ட மராடு கடலோரப் பகுதியில் மனுதாரர் நிறுவனம் விதிகளை மீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்பை உச்சநீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டுள்ளதையும், கேரளா போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், முன்ஜாமின் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞரின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.